Saturday, January 20, 2024

கருப்பொளி

போகப் போக எல்லாம்

பழகிக் கொண்டிருந்தது.

வெளிச்சம் வர இன்னும்

சில தசாப்தங்களாகலாமென

அரசாங்கங்கள் அறிவித்திருந்தன.

உலகே கருமை பூண்டிருந்தது.

கூரான வடிவங்கள் தடை செய்யப்பட்டன.

வளைவு முனைகளே ஆகமமாகியிருந்தது.

பிறவிக் குருடர்கள் 

பெருந்தலைவர்களாகி 

வழிகாட்டிக் கொண்டிருந்தனர்.

சர்க்கரை வியாதிக்காரர்கள்

பாத்ரூமுக்கு பக்கத்தில் படுத்துக்கொள்ள

கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

கூகைகள் தேசியப்பறவைகளாக

அங்கீகரிக்கப் பட்டிருந்தன.

எல்லாம் பழகி விட்டிருந்தது.

பின்னொரு நாளில் 

வெளிச்சம் வந்தபோது

இருள் எளிமையாகி விட்டிருந்தது.

வெளிச்சம் சங்கடமாக இருந்தது.

Friday, December 29, 2023

க்ரே கலர் கரடி பொம்மை

நாங்கள் எப்போதும் விளையாடும்

மரப்படிகளுக்குக் கீழேதான்

தாச்சுவை என்னிடம் அப்புனு கொடுத்தாள்.

அவங்க அப்பாவுக்கு ட்ரான்ஸ்ஃபராம், குடிபெயர்ந்து சென்றார்கள்.

தாச்சு நன்றாகத்தான் இருந்தது  - ஒன்றிரண்டு இடங்களில் நூல் பிரிந்திருந்ததைத் தவிர.

பத்திரமாக வைத்திருந்தாலும் அவ்வப்போது பிரிந்த நூல் வழியாக

பஞ்சுகள் வெளிவந்துகொண்டிருந்தன.

ஆனாலும் புதுப்பஞ்சடைத்து அப்படியே வாங்கியமாதிரியே பதப்படுத்தியிருந்தேன்.

பிறிதொரு நாளில் அப்புனுவை அவள் கல்யாணத்துக்கு முன் சந்தித்து கொடுத்தபோது

தாச்சுவா, ஞாபகம் இல்லையே என்று சொல்லி வாங்கிக் கொண்டாள்.

தாச்சுவுக்கு ஏமாற்றமாகத் தெரியவில்லை என நினைக்கிறேன்

எப்போதும் போலவே சிரித்துக்கொண்டிருந்தது.


Saturday, November 25, 2023

தானியக் குதிர்

குத்துவது முதுகிலா நெஞ்சிலா என்பதற்கு

நீண்ட விவாதம் தேவைப்பட்டது.

முதுகிலென முடிவெடுத்தபின்

காரணங்கள் தேவைப்பட்டன.

இழை விலகல்கள் பெரிதாக்கப்பட்டன.

பாஷாணம் தோய்த்த கத்திகள்

பதப்படுத்தி வைக்கப்பட்டன.

ஏற்பாடுகளின் சுவடுகள்கூட

தெரியாமல் பார்த்துக் கொண்டோம்.

குத்தியது ஏனெனத்தெரிய 

அவனுக்கு சில கணங்கள் ஆனது.

சிறிது யோசித்தவன்

எனது சோற்றுத்தட்டு 

இனிமேல் செந்திலுக்கு

என்றபின் மடங்கி விழுந்தான்.

தட்டினை உருவிக்கொண்டேன்.

தானியக் குதிருக்கு

இன்னும் சில காலங்களுக்கு

இரை தேவையில்லை.

Saturday, June 03, 2023

நீரளவு நீராம்பல்

சரவணனுக்கு அழுகையே வரவில்லை.

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்

தற்கொலைதானென 

உறுதி செய்திருந்தது.

மாமனார் கண்ணோடு 

கண் நோக்கவில்லை.

பெருங்கூட்டத்துக்கு நடுவே 

தனியனாய் நின்றுகொண்டிருந்தான்.

வெட்டியான் கடைசி வரட்டி 

எடுத்துக்கொண்டு 

முகம் பார்த்துக்கொள்ள சொன்னபோதோ

ஆற்றில் தலைமுழுகும்போதோ

வீடுவந்தபின் கட்டிக்கொண்டு அழுத

மகள்களைப் பார்த்தோகூட

சரவணனுக்கு அழுகை வரவில்லை.

அறுத்துக் கொண்டிருந்ததெல்லாம்

ஒரேயொரு கேள்விதான் - 

இன்னும் கொஞ்சம் நம்பியிருக்கலாமோ?

Sunday, October 10, 2021

ராகுல் அப்பா

ராகுல் அப்பா வலக் கையில்தான்

எப்போதும் கடியாரம் கட்டுவார்.

வேலை முடிந்து தெரு நுழையும்போதே 

அவர்தானென்பது அத்தர் வாடையிலேயே தெரிந்துவிடும்.

ரொம்பத் தன்மையான மனிதர்.

அதிர்ந்து ரெண்டு வார்த்தை பேசமாட்டார் - 

யாரும் நோகப் பேசியதேயில்லை.

அவர் பேர்கூட யாருக்கும் தெரியாது.

ராகுல் பத்து வருடங்களுக்கு முன்பே

பெயிலான பாடங்களுக்காக

அவரிடம் அடிவாங்கிய இரவில்

வீட்டைவிட்டு ஓடி விட்டாலும்,

எல்லோரும் ராகுல் அப்பா 

என்றே இன்றுவரை கூப்பிடுகிறோம்.