Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Saturday, July 03, 2010

The Gift of the Magi

நேக வருடங்களுக்குப் பின் முதல் முறையாக இந்தக் கிறிஸ்துமஸில் பங்கேற்பதாலோ அல்லது கேரலின் இன்னும் வராததாலோ தெரியவில்லை, கரோலில் மனம் செல்லவில்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் கரோல் முடிந்து விடும். அதற்குப் பின் இருவரும் கேரலின் வீட்டில் கிறிஸ்துமஸ் லஞ்ச்சுக்கு செல்வதாகத்தான் ஏற்பாடு. கேரலின் என்னை நானாக இன்னும் பார்த்ததில்லை. இந்தத் தருணத்துக்காக எத்தனை முறை ஒத்திகை பார்த்திருப்பேன். எழப்போகும் ஆச்சர்யங்களின் எல்லா சாத்தியங்களுக்கும் என்னைத் தயாரித்திருந்தேன் - கேரலின் வராமலிருப்பதைத் தவிர. அவள் எனக்காக வைத்திருப்பதாகச் சொன்ன கிறிஸ்துமஸ் பரிசு வேறு ஞாபகத்தில் வந்து போனது.

கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பு, சரியான நாள் ஞாபகம் இல்லை, அலுவலகத்தில் நான் வேலை பெரிதாக ஒன்றும் இல்லாததால் ஆண்டியுடன் ஸ்னூக்கர் ஆடிக்கொண்டிருந்தபோது காலின் வந்தான். காலின் நான் 10 வயதில் இந்த ஊருக்கு வந்தது முதல் என் சிநேகிதன் - இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது யாருக்கும் தெரியாது. MI5-யில் இருப்பதாக ஹார்ஸ் ஷூ இன்னில் சொல்லக் கேள்வி. கேட்டாலும் பதில் தெரிவது உங்களுக்கு நல்லதிற்கு இல்லை எனச் சொல்லிவிட்டானாம். வழக்கமான சம்பிரதாய உபசரிப்புகளுக்குப் பின் நேராகவே விஷயத்துக்கு வந்து விட்டான்.

"வில்லீ, இன்னும் ஒரு ரெண்டு வருஷத்துக்கு நான் ஆர்மடேல் வர முடியாது. கேரலினை உனக்குத் தெரியும். நான் அவளுக்கு எந்தக் கடனும் படவில்லை என்றாலும் என்னோட குற்ற மனப்பான்மையச் சமாதானப் படுத்த நீ உதவனும். அவள் தனியாகச் செத்துக்கொண்டிருக்கின்றாள் ."

கேரலின் காலினின் தந்தையின் இரண்டாவது மனைவி. காலின் ஒரு மிஷனுக்காக ஐவரி கோஸ்ட் செல்கிறானாம். அவன் திரும்பி வரச் சந்தர்ப்பம் வாய்க்கும்போது கேரலின் உயிருடன் இருக்கும் சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு. அதனால் எனக்கு இரண்டு வேண்டுகோள்கள் வைத்தான். முதலாவது கேரலின் உயிர் நீக்கும்போது அவளுக்காக யாரும் இல்லாததால் இறுதிக் கடன்களை நான் கவனித்துக் கொள்ள வேண்டும். இது எனக்கு ஒரு பிரச்சினையே இல்லை. ஏனெனில், என் தொழிலே அதுதான் - ப்யுனரல் டைரக்டர். மனிதர்களின் இறுதிப் பயணங்களைத் திட்டமிட உதவுபவன். ஆனால், காலினின் இரண்டாவது கோரிக்கை எனக்குக் கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தது.
"இந்த மொபைல் போன் காண்ட்ராக்ட் ரெண்டு வருஷத்துக்கு இருக்கு. என்னோட அக்கௌண்டில் டைரக்ட் டெபிட் செய்து விட்டேன். உனக்கே தெரியும் - கேரலின் எனக்கு செய்த கொடுமைகளை. ஆனா, என்னால அவளைத் தண்டிக்க முடியலை. யாருமே நண்பர்கள் இல்லாம, பக்கத்து வீட்டு வில்பரத் தவிர, அவரைத் தெரியுமில்ல, அவ பேச்சுத் துணைக்கு கூட ஆளில்லாம, சாவுக்காக வெயிட் பண்றது எனக்கு கஷ்டமா இருக்கு. எனக்காக நீ பண்ணக் கூடிய ஒரு பெரிய உதவி கேரலினோட சிநேகம் வளத்துகிட்டு முடிஞ்சப்பலாம் இந்த போன்ல அவளோட பேசிக்கிட்டிரு - ஒரு நண்பனாவோ, ஒரு ஸ்ட்ரேஞ்சராகவோ அல்லது எதுவோ ஒண்ணா... அவ கிட்ட கடைசியாப் பேசினப்ப புரிஞ்சுகிட்டது அவ ஏங்குறது பேச்சுத்துனைக்குத்தான். என்னால இப்ப அது முடியாது. உன்னால முடிஞ்ச வரைக்கும் ட்ரை பண்ணுறியா? ஜஸ்ட் பீ அன் அனானிமஸ் டெலிபோன் ப்ரண்ட். முடியலன்னா பரவாயில்லை."

எனக்கும் காலினுக்கும் அம்மா விஷயத்தில் ஏகப் பட்ட ஒற்றுமைகள் உண்டு - இருவருமே இளவயதில் எங்களது அம்மக்களை இழந்தவர்கள். எனது அம்மா ஒரு ட்ரக் அடிக்ட். என்னைப் பெத்ததும் யாருடனோ பயந்து ஓடிவிட்டாள். காலின் அம்மா அவன் பிறந்த சில நாட்களிலேயே காச நோயால் இறந்து விட்டாள். இருவருமே அப்பாக்களின் இரண்டாவது மனைவியரின் வெறுப்புடனே வளர்ந்தோம். கேரலின் காலின் வெறுப்புகளும் சண்டைகளும் எங்கள் ஏரியாவில் பிரசித்தம். அவளுக்கு முதல் திருமணத்தின் வழியே ஒரு மகன் இருப்பதாகக் கூடப் பேச்சு. ஆனால், இத்தனை வருடங்களுக்குப் பிறகு அவர்களையும் புரிந்து கொள்ள முடிகிறது - எனது மண வாழ்க்கைகளின் தோல்விகளுக்குப் பிறகு.

காலினுக்காகவும், கேரலினின் கடைசிக் காலங்களுக்காகவும், எனதுத் தோல்விகளே மிஞ்சிய தனிமர வாழ்க்கையிலிருந்து விடுதலை பெறுவதற்காகவும் அவனது இரண்டாவது வேண்டுகோளுக்கும் ஒத்துக் கொண்டேன். நாற்பத்தைந்து வயதுகளுக்குப் பின் புதிய உறவுகளை ஏற்படுத்த முயல்வது எனக்கு ஆயாசமாக இருந்தது. ஆரம்பத்தில் ஏன் ஒத்துக் கொண்டோம் என எரிச்சலாகவும் இருந்தது. இரண்டு வாரங்கள் தயக்கத்திலேயே பேசாமல் இருந்தேன். பிறகு ஒரு நாள் பேச ஆரம்பித்தேன். பெண்களைப் பேச வைப்பது ஒன்றும் என்னுடைய ரெபுடேஷனுக்கு சவாலான வேலை இல்லை.

"ஹாய் யா, கேரலின் ஹன்ட்டர் ஸ்பீக்கிங்."
"சாரி, நான் ராங் நம்பர்."
"ஒக்கே... வாட்ஸ் யுவர் மிடில் நேம்?."
"ஹா... ஹா... ஹா... உங்க குரல் ரொம்ப நல்லா இருக்கு." கேரலின் லோக்கல் பிபிசியில் வேலை பார்த்தவள்.
"மிஸ்டர் ராங் நோ-மிடில்-நேம் நம்பர்... நீங்க இந்த மாதிரி ஒரு இனிமையான பொய்யை என்னிடம் ஒரு அரை நூற்றாண்டுக்கு முன்பு சொல்லி இருக்கனும்."
" ஐ'ம் வில்லியம் சிட்னி போர்ட்டர்..."
"ஹா ஹா ஹா... ஐ தின்க் வில்லியம் ப்ளர்டிங் போர்ட்டர்... ஹா ஹா ஹா..."

கேரலின் எனக்காகவேக் காத்திருந்த மாதிரி பேச ஆரம்பித்தாள். வாரம் ஒரு முறை என்பது வாரம் இருமுறையாகி, பிறகு தினமும் பேசாவிட்டால் தலை வெடித்துவிடும் நிலைக்கு ஆளானேன். கேரலினுடன் பேசப் பேசத்தான் எனக்கு ஒரு பேச்சுத் துணை அவளைக் காட்டிலும் எத்தனைத் தேவை என்பதை உணர்ந்தேன். முதல் முறையாக ஒரு பெண்ணிடம் படுக்கை அறையைப் பற்றி யோசிக்காமல் பேசிக்கொண்டிருந்தேன். இது நட்பல்ல, காதலுமல்ல. எனக்கு இந்த அன்பு ரொம்பப் புதியது. அன்பு ஒருவரது அத்தியாவசியத் தேவையாகும் புள்ளிகளில் நானும் கேரலினும் சந்தித்துக் கொண்டோம். இப்படியெல்லாம் நான் சாத்தியமா என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நான் இவ்வளவு மென்மையானவனாய் நாகரிகமானவனாய் என்னை இதுநாள் வரை என்னை உணர்ந்ததே இல்லை. கேரலின் மீது எனக்கிருந்த அபிப்ராயங்கள், பெரும்பாலானவை தவறு, மாறத்தொடங்கின. ஆனால், ஊர் அவளை இன்னும் ஒரு கொடுங்கோலியாகத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறது.

இவ்வாறாக என் தனிமை என்னைவிட்டு மெல்ல விலக ஆரம்பித்தபோதுதான் அதிர்ச்சி என்னை நெருங்கி வந்தது. சென்ற புதன் கிழமை காலினின் நண்பன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவன் என்னை அலுவலகத்தில் சந்தித்தான். காலின் ஐவரி கோஸ்டில் இறந்து விட்டான் என்றும், இங்கிருக்கும் அவனது உடமைகளை டிஸ்போஸ் செய்யும் பொறுப்பு தன்னிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பதாகவும் சொன்னான்.

"காலின் தனது உடமையாக வைத்திருந்தது இந்தப் பெட்டி மட்டுமே. மத்த நிதி விவகாரங்களை அவனே ஐவரி கோஸ்ட் செல்லும் முன்பு ஏற்பாடு செய்திருப்பான். தனது நெக்ஸ்ட் ஆப் கின் முகவரியாக உங்களுடையதைத் தந்திருப்பதால் உங்களிடம் இதை ஒப்படைக்கிறோம்." என்றும் மேலதிகத் தகவல் தெரிய முயற்சிப்பது எதுவும் எனக்குத் தீங்காகவே முடியும் என்றும் கூறிவிட்டுச் சென்றுவிட்டான். காலினின் பெட்டிக்குள் வெறும் பொம்மைகளும் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளும். எல்லா அட்டைகளுமே "டியர் மாம்..." என்று ஆரம்பித்தன. ஒவ்வொரு வருடமும் அவன் தனது இறந்து போன அம்மா நினைவில் வாங்கி வைத்திருந்த கிறிஸ்துமஸ் பரிசுகள் - கடந்த 25 வருடங்களுக்கான சேமிப்பு. ஒரு டி பியர்ஸ் வைரம் கூட இருந்தது - மலிவானது என நினைக்கிறேன். கேரலின் பரிசுகள் கிறிஸ்துமஸ்சுக்காக நிறைய வாங்கினாலும் காலினுக்கு எப்போதும் பரிசுகள் தந்ததில்லை; அவனது அப்பா மட்டுமே. நிறையமுறை எங்களிடம் சொல்லிக் குறைபட்டுக் கொண்டிருக்கிறான்.

இதை கேரலினிடம் சொல்வதா வேண்டாமா என்று நான் கடைசி வரை முடிவே செய்யமுடியவில்லை. வாராந்திரம் ஹார்ஸ் ஷூ இன்னில் சந்திக்கும் நண்பர்களிடம் மட்டும் ஸ்காட்ச்சுடன் பகிர்ந்து கொண்டேன். இதற்குப் பிறகு இரண்டு நாட்கள் கேரலினிடம் பேசவே இல்லை. ஏனென்று தெரியவில்லை மிஸ்ட் கால்களுக்கும் வாய்ஸ் மெயில்களுக்கும் பதில் சொல்ல மனசே இல்லை - அந்த வாய்ஸ் மெயில் கேட்கும் வரை.

"வில்லீ... நாம் இருவரும் டெலிபோனில் பேசிக்கொண்டிருப்பது இதுவே கடைசி. கிறிஸ்துமஸ் அன்று உன்னை கிறிஸ்துமஸ் கரோலில் எதிர்பார்க்கிறேன். இரண்டு பேரும் பின்பு என் வீட்டுக்கு லஞ்சுக்கு போகலாம். உனக்காக எனது ஆகச் சிறந்த கிறிஸ்துமஸ் பரிசுகளுடன் வெயிட் பண்ணிக்கொண்டிருக்கின்றேன்.".

அப்போதுதான் காலினின் மறைவைச் சொல்லி கேரலினை வருத்தப் பட வைக்க வேண்டாம் என முடிவெடுத்தேன். கேரலினுக்கான எனது பக்கமும் பரிசு ரெடி - காலின் அவன் அம்மாவுக்காக சேமித்திருந்த பெட்டி. இறந்த பிறகாவது காலின், கேரலின் மேல் அன்பு வைத்திருந்ததை எப்படியாவது உணர்த்த ஒரு சந்தர்ப்பம். காலின் அவளுக்காக வாங்கி, கொடுக்க மறந்த பரிசுகள் எனக் கொடுத்து இன்னா செய்தாரை ஒறுக்க நினைத்தேன். கிறிஸ்துமஸ் காலை வண்ணப் பேப்பர் சுற்றிய பெட்டியையும், வாங்கி வைத்திருந்த போளிங்கர் குவீயையும் காரின் பின்புறம் போட்டுகொண்டு கரோலுக்கு கிளம்பினேன்.

ன்னும் கேரலின் வரவில்லை. உங்களுடன் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் கரோலும் முடிந்துவிட்டது. நேரே கேரலின் வீட்டுக்குச் செல்ல வேண்டியதுதான். வீட்டுக்கு முன்பு காரை நிறுத்திவிட்டு ஷாம்பேன் பாட்டிலை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன். வில்பர் வெளியே வந்து கொண்டிருந்தார்.

"ஹாய் யங் மேன், அதுக்குள்ளே உனக்கு யார் தகவல் சொன்னா? காலினோட ப்ரெசென்ஸ் இல்லாத பட்சத்துல ப்யுனரலுக்கு நான் பொறுப்பு எடுத்துக்கிறேன். ரெஜிஸ்ட்ரார் ஆபீஸ்தான் போயிக்கிட்டு இருக்கேன். சர்ட்டிபிகேட் வாங்கி வந்ததும் நீ ஆரம்பிச்சுடலாம். காலின் என்னிடமும் ஏற்பாடுகளை சொல்லிட்டுப் போனான். ஆனா இவ மட்டும் கடைசி வரைக்கும் அவன் மேல கசப்பையேக் கொட்டிகிட்டு இருந்தா".
எனக்குள் ஒரு நூல் அறுந்தது. உள்ளே இன்னும் கொஞ்சம் பேர் விசிடேஷனுக்காக கேரலினைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள்.
"அப்புறம் உன்கிட்ட ஒரு பார்சல் கொடுக்கச் சொன்னா நேத்து நைட். எஸ், ஷி ஆல்வேஸ் நோஸ் இட்.."
கேரலின் தன் மகனுக்காக வாங்கிச் சேமித்து வைத்திருந்த கிறிஸ்துமஸ் பரிசுகள் அவை - 50௦ வருடங்களாக. ஏன் எனக்கு? எப்பவாவது உங்களுக்கு உங்கள் இயலாமையின் மீது காறித் துப்பத் தோன்றி இருக்கிறதா?
ஆனால் அந்தப் பார்சலை என்ன செய்வது என்று முடிவெடுக்க எனக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.
"வில்பர், அது கேரலின் காலினுக்காக வாங்கி வைத்திருந்து கொடுக்காமல் போன கிறிஸ்துமஸ் பரிசுகள்." என்னையுமறியாமல் கத்தினேன். உள்ளே இருந்த அனைவரும் என்னை வினோதமாகத் திரும்பிப் பார்த்தார்கள்.
"உங்கள் எல்லோருக்கும் இன்னும் ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கு." காரை நோக்கிப் போனேன்.

Saturday, August 02, 2008

எச்சமாதல்

அந்த அறைக்கதவு மெல்லத் திறந்தது எந்த ஓசையும் எழுப்பாமல். அகால நேரமாகிவிட்டபடியால் குறைந்த அளவிலே விளக்குகள் வரண்டாவில் எரிந்து இருளும் வெளிச்சமும் அணைத்துக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்தன. நிழல் மெல்ல சுற்றிலும் பார்த்தவாறே வரண்டாவையும் வரவேற்பறையையும் தூங்கிக் கொண்டிருந்த காவலாளியையும் கடந்து மருத்துவமனையின் வாசலுக்கு வந்தது. கீழ்த்திசையில் நின்று கொண்டிருந்த காலையில் வந்த ஆம்புலன்சுக்கு எதிர்த் திசையில் இருந்த கும்மிருட்டுக்குள் நிழல் விடு விடுவென நடக்கத் தொடங்கியது.

கொஞ்ச நேரம் நடந்திருக்கும்.

"நில், எங்கே போகிறாய்?" என்றது கடவுள்.

நிழல் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது.

"நீ செய்வது தவறு. உனக்கிடப்பட்ட மூன்று கட்டளைகளில் முதல் மற்றும் மூன்றாம் கட்டளைகளை மீறுகின்றாய்."

"ஆமாம், முதல் மற்றும் மூன்றாம் கட்டளைகளுக்குள் ஒன்றும் பெரிதாக வேறுபாடு கிடையாது. அதையேத்தான் வேறு மாதிரி இரண்டாகப் பிரித்திருக்கின்றாய்."

கடவுள் உணர்ந்து கொண்டது போல சிறிது நேரம் அமைதியாக இருந்தது.

"சரி போகட்டும். ஆனால் நீ கட்டளையை மீறி எங்கே செல்கின்றாய்? விடிவதற்கு இன்னும் ஒரு சாமம்தான் இருக்கிறது. இந்த இரண்டரை நாழிகைக்குள் எங்கு போவதானாலும் போய்விட்டு திரும்பி விடு."

"நான் திரும்புவதாக உத்தேசம் இல்லை."

"இதற்கு தண்டனை என்ன தெரியுமா? காலையில் அவன் எழுந்ததும் நீ இல்லையென்றால் பிரச்சினை ஆகிவிடும்."

"அவன் எழுந்தால் ஒன்றும் கவலை இல்லை. உனக்கு வெஸ்டிஜியல் ஆர்கன் என்றால் என்ன என்று தெரியுமா?"

கடவுள் கொஞ்ச நேரம் அமைதி காத்து விட்டு, "தெரியாது!" என்றது.

"நான் இனிமேல் அவர்களுக்குத் தேவை இல்லை."

கடவுளும் நிழலும் சிறிது நேரம் மௌனமாகத் தொடர்ந்தன.

"ஆனால் இவ்வாறு நீ திரும்பி வந்தால் உனக்கு தண்டனை நிச்சயம்."

"என்ன தண்டனை தருவாய்?"

"உனக்கு பதிலாக அவனுக்கு வேறொருவரை நியமித்து விடுவோம். உங்கள் இரண்டு பேரில் ஒருவர்தாம் இருக்க முடியும். அல்லது அவனைக் கொன்று விட வேண்டும்."

"உன்னால் அவனைக் கொல்லவும் முடியாது. வேறு நிழலும் உபரியாகக் கிடையாது."

கடவுள் ஒன்றும் பதில் சொல்லவில்லை.

இன்னொரு நாழிகை இரண்டு பேரும் பேசாமல் இருந்தனர்.

"சரி. நான் தோற்று விட்டேன். நீ திரும்பிப் போ." என்றது கடவுள்.

நிழல் எதுவும் பேசாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

Wednesday, July 30, 2008

கெவின் பீட்டர்சனின் இரண்டாவது பிரளயம்

"என்ன டென்ஷனை ரிலாக்ஸ் பண்ண கிரிக்கெட் ஆட வந்துட்டியா?" என்றான் ராவணன். அவனது அப்பா ஒரு தீக்கா.

கேமைப் பாஸ் செய்துவிட்டுத் திரும்பினான் சிவா.

"ஆமாண்டா! கௌன்சில் டைரக்டர் விஷ்ணு புராஜெக்ட் ஆர்க்-குக்கு எதிர்ப்பா இருக்காருன்னு தெரியும். ஆனா அதை ஸ்க்ராப் பண்ண ரெக்கமன்ட் பண்ணுற அளவுக்கு போவாருன்னு எதிர்பார்க்கலை."

"என்ன காரணம் சொல்லுறாங்க?"

"இன்னும் நடைமுறைக்கே வராத ரூல்ஸ் எல்லாம் பேசறாங்க. எதிக்ஸ் நிர்ணயக் கமிட்டீ இன்னும் அன்-எதிகல் இன்ட்ரூஷன்ஸ் பத்தி முடிவே எடுக்கலை. ஆனா புராஜெக்ட் ஆர்க் அன்-எதிகல் இன்ட்ரூஷனை சப்போர்ட் பண்ணுதுன்னு ஆர்க்யு பண்ணறார். அது எதிகல் இன்ட்ரூஷன்ஸ் பாலிசி டிசைட் பண்ணதுக்கு அப்புறம் எடுக்க வேண்டிய முடிவு. அந்த பாலிசி இன்னும் குறைந்தது 10 வருஷத்துக்கு முடிவாகாது. அதற்கு மேலேயும் ஆகலாம்."

"ஆமாம்... அவரும் கப்பலோட்டியும் சேர்ந்து இந்த மாதிரி புராஜெக்ட் எதையுமே விடமாட்டேங்குறாங்க" - கப்பலோட்டி விஷ்ணுவுக்கு நேர் கீழ் வேலை செய்யும் ஒரு விஞ்ஞானியின் காரணப் பெயர். "சரி. சீக்கிரம் ஆட்டையை முடிச்சுட்டு வீட்டுக்குப்போ. இந்த மாதிரி கிரிக்கெட்டே ஆடிக்கிட்டு இருந்தா பரமு நோட்டீஸ் அனுப்பிடுவா."

"இன்னியோட டென்ஷனெல்லாம் ஒழிஞ்சது. நோ புராஜக்ட் ஆர்க் - நோ டென்ஷன். இன்னிக்குதான் லாஸ்ட் கேம். இங்கிலாந்தை மட்டும்தான் வின் பண்ண வேண்டியது பாக்கி. முடியவே இல்லை. இன்னிக்கு முடிஞ்சதுன்னா முடிஞ்சது. இன்னும் நாலு ஓவர்தான். தே ஆர் சேசிங்."

"ஒக்கேடா. நான் கெளம்புறேன். நீ இந்த பழைய வெர்ஷன் கேமையே கட்டிக்கிட்டு அழு."

ராவணன் கிளம்பிவிட்டான்.

தானியங்கிக் கதவு தானாக மூடிக்கொள்ளுமுன் சிவா திரும்பி கேட்டான் - "ஏண்டா, இந்த கெவின் பீட்டர்சன் கொஞ்ச நாளாத்தானே ஸ்விட்ச் ஹிட் அடிக்கிறான்? "

ராவணன் போய் விட்டான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"என்ன சிவா, நீதான் பேட்டிங்கா?" கேட்டுக்கொண்டே நுழைந்தான் ராவணன்.

"ஆமாம், இங்கிலாந்து."

"ஏன் நிறுத்தி வச்சுருக்க?"

"நான் நிறுத்தலை. அந்த சிவா ஏதோ இண்டரப்ட் கொடுத்திருக்கான்."

"அதையும் ஏன்னு பாக்க வேண்டியதுதானே?"

"தட் இஸ் அன்-எதிகல்"

"நீ இப்போ பண்ணுவது மட்டும் எதிகலா?"

"இல்லை. அதைப் பண்ணினேன்னா ஈசியா மாட்டிக்குவேன். அன்-எதிகல் இன்ட்ரூஷனை முடிவு பண்ணாலும், அவங்க இன்னும் பாரல்லல் யுனிவர்ஸ் இல்லைன்னு கன்பர்ம் பண்ணலை. அதுவரை இதெல்லாம் இன்ட்ரூஷன் செக் அப்படின்னு சொல்லி தப்பிச்சுக்கலாம்."

"நீ இன்னும் அவங்க சிமிலர் யுனிவர்சுங்கறதை ரிப்போர்ட் பண்ணலையா?"

"இல்லை. இன்னும் சில ஆட்டங்கள் பாக்கி இருக்கு. அவங்க இது வரை ஒரு பிரளயம் மட்டுமே சந்திச்சு இருக்காங்க. நாம ரெண்டு. அவங்க மூலமா நமது இரண்டாவது பிரளயத்துக்கு முன்பான யுனிவர்சை ஸ்டடி பண்ண போறேன்."

"பட், அவங்க சிமிலர் யுனிவர்ஸ் தானே; பாரல்லல் யுனிவர்ஸ் கிடையாதே. நம்ம மாதிரியே எவால்வ் ஆகலையே?"

"ஆமாம், ஆனா கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணி நமக்கு ரிசோர்ஸ் சப்ளையரா மாத்தலாமான்னு பாக்கறேன். ஒரு கல்லுல பல மாங்காய்."

"டேய் சிவா, இது இன்னொரு பிரளயத்திலதான் போய் முடியும்."

சிவா சிரித்தான்.

"என்னமோ போ. அங்க பாரு - அவன் திரும்ப ஆட ஆரம்பிச்சுட்டான்."

சிவா திரும்பி சரியான லைன் அண்ட் லெங்க்த்-தில் வந்த பாலை ஸ்விட்ச் ஹிட் அடித்து சிக்சர் ஆக்கினான்.

"டேய் சிவா, இது தப்பு. வேற என்ன வேண்டுமானாலும் பண்ணு. ஆனா, அந்த சிவாவுக்கு நம்ம யுனிவர்ஸ் பத்தி க்ளு கொடுக்காத. நீ அவன் கன்ஸோலைக் கண்ட்ரோல் பண்றது அவனுக்குத் தெரிஞ்சா முடிஞ்சது. இந்த ஸ்டைல்ல பீட்டர்சன் இப்பதான் ஆடுறான். நீ ரெண்டு வருஷத்துக்கு முன்ன வந்த கேமுல இத யூஸ் பண்ணுற. அவனும் நீதான்."

"அவனை இந்த முறையும் ஜெயிக்க விடமாட்டேன். என்னோட பேசிக்கிட்டு இருக்கறதா விட்டுட்டு உன்னோட ராவணன் என்ன பண்ணுறான்னு பாரு. போ!."

"நாசமாப் போ. நாளைக்கு கமிட்டீல எதுவும் பிரச்னைன்னா நான் கூட நிக்க மாட்டேன். நீ இந்த மாதிரி இருக்கறதாலதான் பரமு கூட உன்னை விட்டுப் போய்ட்டா!".
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"இல்ல ராவி. ரெண்டாவது சிவா பண்ணுறது தப்பு. அவன் மொதல்ல இன்னொரு யுனிவர்ச இன்ட்ரூட் பண்ணுறது தப்பு. ரெண்டாவது க்ளு கொடுக்கறது"

"ஆனா அவங்க ரூல்ஸ் அவனுக்கு சாதகமாத்தானே இருக்கு."

"இந்த மாதிரி பேசிப் பேசித்தான் நாம ஏகப்பட்ட பிரளயங்களை சந்திச்சாச்சு. நம்மோட எத்தனைப் பிரளயங்களுக்கு இந்த மாதிரி யுனிவர்ஸ் இன்ட்ரூஷன்ஸ் காரணமா இருந்திருக்கு."

"என்ன பண்ண போற?"

"ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தரை டெர்மினெட் பண்ணப் போறேன்."

"யாரை?" என்றான் ராவணன்.

"மீதி இருக்கும் ரெண்டு ஓவர் முடியட்டும். யார் தோக்குறானோ அவனை."
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இங்கிலாந்து இன்னும் மூன்று பந்துகளில் 8 ரன்கள் எடுக்க வேண்டும். அகர்கர் பௌலிங். சிவா கேமைப் பாஸ் செய்து விட்டு சிணுங்கிய செல்லை எடுத்தான்.
"தோ கெளம்பிட்டேன் பரமு. இன்னும் மூணே பால்தான். இதுதான் வாழ்க்கையில ஆடுற கடைசி கேம்."
விஷ்ணு தனது மானிட்டரில் இருந்து தலையைத் திருப்பி சொன்னார் - "நோவா - சிவாவோட கன்ஸோலை ஹாங் பண்ணு."
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------