Saturday, August 02, 2008

எச்சமாதல்

அந்த அறைக்கதவு மெல்லத் திறந்தது எந்த ஓசையும் எழுப்பாமல். அகால நேரமாகிவிட்டபடியால் குறைந்த அளவிலே விளக்குகள் வரண்டாவில் எரிந்து இருளும் வெளிச்சமும் அணைத்துக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்தன. நிழல் மெல்ல சுற்றிலும் பார்த்தவாறே வரண்டாவையும் வரவேற்பறையையும் தூங்கிக் கொண்டிருந்த காவலாளியையும் கடந்து மருத்துவமனையின் வாசலுக்கு வந்தது. கீழ்த்திசையில் நின்று கொண்டிருந்த காலையில் வந்த ஆம்புலன்சுக்கு எதிர்த் திசையில் இருந்த கும்மிருட்டுக்குள் நிழல் விடு விடுவென நடக்கத் தொடங்கியது.

கொஞ்ச நேரம் நடந்திருக்கும்.

"நில், எங்கே போகிறாய்?" என்றது கடவுள்.

நிழல் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது.

"நீ செய்வது தவறு. உனக்கிடப்பட்ட மூன்று கட்டளைகளில் முதல் மற்றும் மூன்றாம் கட்டளைகளை மீறுகின்றாய்."

"ஆமாம், முதல் மற்றும் மூன்றாம் கட்டளைகளுக்குள் ஒன்றும் பெரிதாக வேறுபாடு கிடையாது. அதையேத்தான் வேறு மாதிரி இரண்டாகப் பிரித்திருக்கின்றாய்."

கடவுள் உணர்ந்து கொண்டது போல சிறிது நேரம் அமைதியாக இருந்தது.

"சரி போகட்டும். ஆனால் நீ கட்டளையை மீறி எங்கே செல்கின்றாய்? விடிவதற்கு இன்னும் ஒரு சாமம்தான் இருக்கிறது. இந்த இரண்டரை நாழிகைக்குள் எங்கு போவதானாலும் போய்விட்டு திரும்பி விடு."

"நான் திரும்புவதாக உத்தேசம் இல்லை."

"இதற்கு தண்டனை என்ன தெரியுமா? காலையில் அவன் எழுந்ததும் நீ இல்லையென்றால் பிரச்சினை ஆகிவிடும்."

"அவன் எழுந்தால் ஒன்றும் கவலை இல்லை. உனக்கு வெஸ்டிஜியல் ஆர்கன் என்றால் என்ன என்று தெரியுமா?"

கடவுள் கொஞ்ச நேரம் அமைதி காத்து விட்டு, "தெரியாது!" என்றது.

"நான் இனிமேல் அவர்களுக்குத் தேவை இல்லை."

கடவுளும் நிழலும் சிறிது நேரம் மௌனமாகத் தொடர்ந்தன.

"ஆனால் இவ்வாறு நீ திரும்பி வந்தால் உனக்கு தண்டனை நிச்சயம்."

"என்ன தண்டனை தருவாய்?"

"உனக்கு பதிலாக அவனுக்கு வேறொருவரை நியமித்து விடுவோம். உங்கள் இரண்டு பேரில் ஒருவர்தாம் இருக்க முடியும். அல்லது அவனைக் கொன்று விட வேண்டும்."

"உன்னால் அவனைக் கொல்லவும் முடியாது. வேறு நிழலும் உபரியாகக் கிடையாது."

கடவுள் ஒன்றும் பதில் சொல்லவில்லை.

இன்னொரு நாழிகை இரண்டு பேரும் பேசாமல் இருந்தனர்.

"சரி. நான் தோற்று விட்டேன். நீ திரும்பிப் போ." என்றது கடவுள்.

நிழல் எதுவும் பேசாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

7 comments:

Anonymous said...

i can't!

eethaavathu puriyutha ungkalukku?

மே. இசக்கிமுத்து said...

திரும்ப திரும்ப படித்து பார்த்தேன், கஷ்டமாக இருக்கிறது!!!

செல்வ கருப்பையா said...

எல்லோரும் இதையேத்தான் சொல்லுறாங்க! Vestigial Organs-ங்கற வார்த்தை நிறைய பின் புலங்களைத் தெளிவாக்கும் என நினைத்தேன் - இல்லை போலும்! அடுத்த முயற்சியில் பார்க்கிறேன்.

அது சரி said...

தல, என்னமோ பெருசா சொல்ல வர்றன்னு தெளிவா தெரியுது. ஆனா அது என்னன்னு தான் புரிய மாட்டேங்குது :0)

மனுசனுக்கு அவன் நிழல் எச்சம், வெஸ்டிஜியல் ஆர்கன் அப்பிடின்னு சொல்றீங்களா??

நீங்க பின்நவீனத்துவ வாதி மாதிரி தெரியுதே :0)

செல்வ கருப்பையா said...

//தல, என்னமோ பெருசா சொல்ல வர்றன்னு தெளிவா தெரியுது. ஆனா அது என்னன்னு தான் புரிய மாட்டேங்குது :0)

மனுசனுக்கு அவன் நிழல் எச்சம், வெஸ்டிஜியல் ஆர்கன் அப்பிடின்னு சொல்றீங்களா?? //
படிச்ச ஒருத்தருக்குமே புரியலைங்கறது வருத்தமாத்தான் இருக்கு. இன்னும் கொஞ்சம் தெளிவா எழுதக் கத்துக்கணும். நிற்க.
நான் கதையாக்க நெனைச்சது - டார்வின் தியரிப்படி கொஞ்ச நாட்களுக்கு அப்புறம் நிழலும் எச்சமாகும் (vestigial organ) ஒரு கணம்; அந்த தியரியோட புரிதல்களில் ஒன்று கடவுள் இன்மை. நிழல் எச்சமாகும் (டார்வின் தியரிப்படி) தருணத்தில், அறிவியலிடம் கடவுள் தோற்கிறார் என்பது சொல்ல நினைத்தது (further implies கடவுள் இல்லை).
பின் நவீனத்துவம் என்னான்னு நானும் ரொம்ப நாட்களாகப் (சுமார் 3 வருடங்களாக) புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன் - இதுவரை முடியவில்லை. நான் பின் நவீனத்துவ ஆள் இல்லை, தல.

அது சரி said...

//
நான் கதையாக்க நெனைச்சது - டார்வின் தியரிப்படி கொஞ்ச நாட்களுக்கு அப்புறம் நிழலும் எச்சமாகும் (vestigial organ) ஒரு கணம்; அந்த தியரியோட புரிதல்களில் ஒன்று கடவுள் இன்மை. நிழல் எச்சமாகும் (டார்வின் தியரிப்படி) தருணத்தில், அறிவியலிடம் கடவுள் தோற்கிறார் என்பது சொல்ல நினைத்தது (further implies கடவுள் இல்லை).
பின் நவீனத்துவம் என்னான்னு நானும் ரொம்ப நாட்களாகப் (சுமார் 3 வருடங்களாக) புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன் - இதுவரை முடியவில்லை. நான் பின் நவீனத்துவ ஆள் இல்லை, தல.
//

ஆஹா, இதுல இம்புட்டு முன் குத்து, பின் குத்து, மேல் குத்து, கீழ் குத்து, இடக்குத்து, வலக்குத்து, உள் குத்து, வெளிக்குத்து இருக்கா? எனக்கு தெரியாம போச்சே.

பிரச்சினை நீங்க கதை சொல்றதுல இல்ல தல. கதை நிஜமாவே ரொம்ப நல்லாருக்கு.

ஆனா பாருங்க, நமக்கு டார்வின்னா, கொரங்கு மனிசன் கத சொன்னாருல்லா, அந்த ஆளு அப்பிடின்னு தான் தெரியும். அவரு இம்புட்டு சொல்லிருக்காரா??

அது சரி said...

//
பின் நவீனத்துவம் என்னான்னு நானும் ரொம்ப நாட்களாகப் (சுமார் 3 வருடங்களாக) புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன் - இதுவரை முடியவில்லை. நான் பின் நவீனத்துவ ஆள் இல்லை, தல.
//

அது ஓன்னும் பெரிய கஷ்டம் இல்ல வோய். நம்ம சாரு நிவேதிதா இருக்காரில்ல, அவரு நெறய (அதாவது ரெண்டு) புஸ்தவம் எழுதிருக்காப்பல. அதுல சீரோ டிகிரின்னு ஒரு புஸ்தவம் இருக்கு. அத படிச்சி பாரும். அது புரிஞ்சிடிச்சின்னா, நீரு பின்குத்திய, ச்சீ, பின் நவீனத்துவ வாதி தான்.