Friday, July 22, 2016

சமரசர்கள்

ஒதுக்குபுறமான சத்தங்களைத் தொலைத்த மூலை,
பெரிதான கூட்டமில்லை.
"இவ்வளவுக்குப் பிறகும் பிடித்துத் தொங்கிக்
கொண்டிருக்கத்தான் வேண்டுமா?" கேட்டான்.
சத்தமாக நான் சிரித்தது வெறுப்பேற்றியிருக்க வேண்டும்.
திரும்பிப் பார்த்தவர்கள் திரும்பி கொண்டார்கள்.
மேலுமொரு மிடறு விழுங்கி கொண்டோம்.
"உனக்காக இல்லாவிடினும்,
நளினிக்காகவாவது யோசிக்கலாமில்லையா?..."
குறுக்காகத் தலையாட்டினேன்.
"சந்தைப் பொருளைக் காட்டிலும்
விற்பனைக்கில்லாப் பொருளின்
மிஸ்டிக் மதிப்பு அதிகம்...
பொய்யிலே வாழ்கிறாய்...
உனக்குத் தெரியுமா,
நான் இப்போதுதான் சந்தோஷமாயிருக்கிறேன்...
உங்களுடனிருந்ததுதான் சமரசம்...".
என்னுடைய உடற்குறிகளின்
பொருள் அவனுக்குத் தெரியும்.
மேலும் ஆத்திரமானான்.
நிறையப் பேசினான். குடித்தான்.
அழுதான், அடித்தான், திட்டினான்.
பிறகு பணத்தை எறிந்துவிட்டு எழுந்து போய்விட்டான்.
நளினி, அடுத்தமுறை உன்னுடன் பேசும்போது
உடனே துண்டித்துவிடாதே,
சுவாரஸ்யமாகப் பேசுகிறான்.

No comments: