Thursday, April 14, 2016

நானும் கடவுள்

இன்னும் எத்தனை ரகசியங்கள்
என்னிடம் மறைத்திருப்பாய்? என்றாள்,
என் கையை எடுத்துத் தன் தலைக்கு முட்டுக் கொடுத்தவாறே!
சிரித்துக் கொண்டே தலையை குறுக்காக ஆட்டினேன்.
இல்லை, சொல்லிப் பார், ரகசியமா எனச் சொல்கிறேன் என்றாள்.
அவளுக்குத் தெரிந்த சிலவற்றைச் சொன்னேன்.
பெருமிதத்தில் முகம் மலர்ந்தாள் - என்னை
முழுதாட்கொண்ட இறுமாப்பு.
எனக்குத் தெரியாதே, இத்தனையா? - நடித்தாள்.
கொம்புகளும், கூர்முனை கொண்ட வாலும்
எனக்கு வெளிவரத் தொடங்கின - பாம்புருவங் கொண்டேன்.
மேலும் சில தெரிந்தவைகளை ஆரம்பித்தேன்.
தெரிந்தவைகளாகவே முடித்தேன்.
கடைசியாக அவளுக்கொரு கனி தந்தேன்.
பிறகென்ன, தண்ணீரில் நடப்பதையும்,
அப்பங்களைப் பகிர்வதையும்,
அவதாரங்கள் எடுப்பதையும் சொல்லிவிட முடியுமா?
ரகசியங்களே ரகசியங்களாலானவைதாமே!

Tuesday, December 02, 2014

இனிச் சாகும்...

நாம் தோற்றுக்கொண்டிருக்கிறோம் மூடர்களே 
என்றான் தலைவன் - 
பாதி கடித்த அதிரசத்தைத் தூக்கி எறிந்துகொண்டே.
கூட்டம் சலசலப்பு நிறுத்தி 
உச்சி மலை நோக்கித் திரும்பியது.
சற்று நேரம் மவுனம் நிலவியது.
போராட்டத்தைத் துவங்கு தலைவா 
எவனோ ஒருவன் கத்தினான்.
புரட்சி ஓங்குக - இன்னொருவன்.
ஆமோதித்த குரல்கள் மலைபட்டுத் தெறித்தன.
தலைவன் ஏதும் பேசாமல்
சில அதிரசங்களை கூட்டத்தை நோக்கி எறிந்தான்.
ஒரு கெட்ட நாற்றம் வீசியது - 
கூட்டம் தலைவனென்றும், 
தலைவன் கூட்டமென்றும் 
சகித்துக் கொண்டார்கள்.
கூட்டத்திலிருந்து விலகி
தலைப்பாகையை அவிழ்த்துத் 
தோளில் போட்டுக் கொண்ட ஒருவன் 
தேங்காய் மூடிகளை எடுத்துக்கொண்டு 
பன்றிகள் தொழுவத்தைத் தேடிப்போனான்.

Sunday, April 22, 2012

குற்றமும் தண்டனையும்

உங்களில் உத்தமர் எவரோ
அவர் முதலில் பந்தத்தை எறியட்டும்
எனக் கத்தினேன்.
முதலில் ஏழு பந்தங்கள் விழுந்தன.
பின்னர் என் வீட்டை எரிக்கத் தேவையானவைகள்.
கூட்டம் கத்திக்கொண்டே
அடுத்த இலக்கை நோக்கி ஓட ஆரம்பித்தது.
நானும் இணைந்து கொண்டேன்.
கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல்
உங்களை குருடர்களாகவும்
பொக்கைகளாகவுமாக்கும் மூடர்களே
எனக் கத்திக்கொண்டிருந்தான் வீட்டுக்காரன்.
நீ ஹமுராபியிடம்
பேசிக்கொண்டிருக்கிறாய் மூட
என முதற் பந்தம் எறிந்தது நான்.
மேலும் பல தீர்ப்புகள்
மேலும் பல தண்டனைகள்
மேலும் மேலும் ஓடிக்கொண்டிருந்தோம்.
பந்தங்களின் ஒளியால் ஊரே பகலாயிருந்தது.
ஒரு கட்டத்தில் கால்கள் பின்னின.
தண்டிக்கப்பட வேண்டியவர்கள்
எண்ணிக்கை குறையப் போவதில்லை.
அலுத்துத் தளர்ந்தேன் - பக்கந்திரும்பி
வெளிச்சங்கள் தொலைந்த
தூர மலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
இன்றிரவாவது தூங்க வேண்டும்.

Saturday, December 17, 2011

The Road Not Taken

அம்மாவிடம்
சத்தியங்களைப் பண்ணி விட்டாயா
என்று கேட்டேன்.
தேவையா என
யோசித்துக்கொண்டிருக்கின்றேன் என்றான்
பொடிமாஸில் இருந்த மிளகாயை
எடுத்துப் போட்டுக் கொண்டே.
சிறிது நேரம் கழித்து
வழக்கத்தை விட சீக்கிரமாகவே
எழுந்து போய் விட்டான் -
பயணத்துக்கான ஏற்பாடுகள்
இன்னும் பாக்கி இருப்பதாக.
மோகன் அம்மாவிடம்
சத்தியம் பண்ணிக்
கொடுத்தானா இல்லையா
என்று தெரியாது.
ஆனால் அவன் திரும்பி வரும்போது
வாங்கி வந்த ஸ்காட்ச்சுகள்
புகைவண்டிச் சம்பவத்துக்கு
பழிதீர்த்த நாளின்
பின்னிரவில் பயன்பட்டன.

Wednesday, December 14, 2011

போதி நிழற் புற்கள்

விபரம் தெரிந்த நாட்களிலிருந்தே
என்னோடு தொடர்ந்து வளர்கின்றன
அந்த மூன்று நாய்கள்.
கொழுத்துச் செழித்து
இருப்பதாக எனக்குத் தெரிந்தாலும்
கோரைப் பற்களை நான் கவனித்ததில்லை -
நண்பர்கள் கூறுவதுண்டு.
எங்களூரில் வெகு சிலரிடமே உள்ள
இவற்றுக்கென இரைகள்
அந்தச் சிலர் மட்டுமே அறிந்த
இடங்களில் கிடைக்கின்றன.
அவற்றின் வெறியின் உச்சத்திற்கு
பலியான நண்பர்களும் உண்டு.
நானும் மற்றும்
அந்த இன்னுஞ்சிலரும்
அவை அளித்த
பாதுகாப்பை மட்டுமே உணர்ந்திருந்தோம்.
சித்தார்த்த கௌதமன் இன்னும் மோசம் -
யசோதாவும் ராகுலனும்
அவனது நாய்களால்
இறந்து பட்டது கூடத் தெரியாது.