Saturday, June 28, 2008

வடக்கு நோக்க...

முப்பதுகளின் இறுதியில் வயது -
கோப்பெருஞ்சோழனை பேருந்துக்கு
காத்திருக்கும் நிமிடங்களில் பரிச்சயம்.

அதிகம் பேசியது இல்லை - ஹலோவில்
ஆரம்பித்து குட் மார்னிங்கிலேயே
முடிந்து விடும் சம்பாஷணைகள்.

மூன்று வாரங்களாக ஆளையேக் காணவில்லை -
விடுமுறையை ஸ்பெயினில்
கழித்துக் கொண்டிருக்கலாம்.
விவாகரத்து ஆனதால்
சோகமாகக்குடித்து கொண்டிருக்கலாம்.
ஒப்பந்தம் முடிந்து வேறிடம் கூடபோயிருக்கலாம்.

எதுவோ காரணம் - ஆனால்
மூன்று வாரங்களாக ஆளைக் காணவில்லை.

அலுவலகம் செல்லும் முன்பு
செலவு செய்து கொண்டிருந்த
ஒரே ஹலோ குட் மார்னிங்-ஐயும்
சேமித்துக் கொண்டிருக்கிறேன்.

வடக்கு எதுவென்று தெரியாததாலும்,
பசி தாங்க முடியாததாலும்
கோப்பெருஞ்சோழன்
மகிழ்ச்சியோ துக்கமோ மீண்டு வர வேண்டிக்கொண்டு
பிசிராந்தையாக நான்!

1 comment:

MSK / Saravana said...

கலக்கல்.. நிதர்சனமான கவிதை..
:))