Saturday, July 19, 2008

நீ நான் மற்றும் உன் தந்தை

வயிற்றினை ஆரத் தழுவி
தூங்காமல் என் முகத்தினைப்
பார்த்துக் கொண்டிருக்கும்போது,

நான் அலுவலகத்திலிருந்து
வீட்டை அடைகையில் என்
கால்களைக் கட்டிக் கொண்டபோது,

நீ முதன் முறையாக
நிற்க முயற்சிக்கையில்
நழுவி விழுந்தபோது,

கடுமையான காய்ச்சலிலும்
வெடித்துக் காய்த்திருந்த
இதழ் பிரித்து நீ சோகையாய்
புன்னகைத்த போதும்,

என் கால்களிலிருந்து
உன் கால்களைப் பிரித்துவிட்டு
இவ்வரிகளை எழுதும்போதும்

ஆகிய இத்தருணங்களில் தானேயன்றி
உன்னை ஈன்ற பொழுதினிற்
அல்ல மகவே - எனை
நான் தந்தையாக உணர்ந்தது.

1 comment:

MSK / Saravana said...

//என் கால்களிலிருந்து
உன் கால்களைப் பிரித்துவிட்டு
இவ்வரிகளை எழுதும்போதும்//

பின்னீட்டீங்க.. அருமை..
:))