Saturday, July 03, 2021

காக்கைக் கூடுகள்

ராமசேஷன் வந்திருப்பதாக அம்மா ஃபோனில் சொன்னபோது 
பஸ் பிடிக்க நடந்து கொண்டிருந்தேன்.
அவர் திரும்பிப் போக எப்படியும் 
ஒரு பத்து நாளாகும்.
அதுவரை நான் தங்குவதற்கு 
இடம் தேட வேண்டும்.
தெருவில் ஏதும் நண்பர்களில்லை - 
மூத்த மகன்கள் இருவரும் அவரை 
அடிக்காத குறையாக ஒருமுறை
அழைத்துச் சென்றதற்குப் பிறகு.
எப்போதும் சகஜமாகப் பேசும் 
மஞ்சள்வீட்டு ஆண்ட்டி கூட
ராமசேஷன் காலங்களில் தன்னைச்
சுருக்கிக் கொள்வதாகத் தோன்றும்.
தன்னை நிறுவிக் கொள்வதற்காக
அம்மா கேட்கும் அரிசிக்கும், 
பருப்புக்கும், இனிப்புக்குமாக
இவரும் கடைக்கும் தெருவுக்குமாக
 லஜ்ஜையின்றி அலைந்து கொண்டிருப்பார்.
யோசித்துக்கொண்டே 
ரோட்டைக் கடக்கும்போது 
சிவப்பு விளக்கிருக்கும்போதே கடந்த
காரொன்று சேற்றை வாரிப் 
பூசிவிட்டுச் சென்றது.
கார்காரன் சன்னலிறக்கி நடுவிரல் காண்பித்து பாஸ்டர்ட் எனக் 
கத்திவிட்டுச் சென்றான்.
நான் இன்னும் எங்கு செல்வதென்று
முடிவு செய்யவில்லை.

No comments: