Sunday, May 10, 2026

மறுகரை

நம்மிருவருக்கும் நடுவிலிருப்பது

குருதி பூத்த நதியொன்று.

உனது கரையில்

மௌனம் சத்தத்தின் மீது

வன்முறை செய்கிறது.

கேள்விகளை

எள்ளி நகையாடுகிறது.

புறந்தள்ளல்

எதிர்வினைகளின் முதுகில் குத்துகின்றன.

உரையாடல் குறைந்தபட்ச

மரியாதை வேண்டி நிற்கிறது.

இருபுறமிருந்தும்

புறக்கணிப்புகளும் முன்முடிவுகளும்

களிகொண்டு கண்சிவந்து

வெறியாட்டமாடுகின்றன.

அந்திகள் மங்குவதே யில்லை.

சங்குகள் என்றும்

ஒலித்த தில்லை.

நதி மட்டும் சலனமின்றி

ஓடிக்கொண்டே யிருக்கிறது.

இப்பாவிகள் தாம் செய்யும்பிழை

இன்னதென அறிகிலார்

பரலோகத்துப் பிதாவே.

இவர்களை மன்னித்து விடாதீர்கள்.

தயவுசெய்து

தண்டித்து அருளுங்கள்.

அடைக்குந் தாழ்

போகா எல்லை சென்று

மீண்டுவந்த அவனை

அன்பின் கம்பளிகள் கொண்டு

அணைத்துக் கொண்டேன்...

அவன் அஞ்சி நடுங்கிய

காயங்களுக்கு

அன்பைக் குழைத்து

களிம்பாய்ப் படர்ந்தேன்.

உங்களுக்குத் தெரியுமா?

அவனது சுவாசப்பைகள்

முழுதும் அன்பினாலேயே

நிறைத்திருந்தேன்.

என்றாவது ஒருநாள்

அவன் என்னிடம்

கூறியிருந்திருக்கலாம் -

மூச்சு முட்டுகிறதென.

என்னைப் பார்க்கவரும்

எல்லோரும்

உங்கள் அன்பினை

வாசலிலேயே கழற்றி

வைத்துவிடுங்கள் -

கெட்ட நாற்றமடிக்கிறது.

Friday, October 04, 2024

உபரி

ஒவ்வொரு நொடியும்

நிரூபித்துக் கொண்டிருந்தனர்.

உள்ளதையும் இல்லதையும்

விளைத்துக் காட்டினார்கள்.

எல்லைகளை எப்போதுமே 

விரித்துக் கொண்டிருந்தார்கள்

விளிம்புகளை அழித்துக் கொண்டிருந்தான் ஒருவன்.

எழுதிக் குவித்துத் தள்ளினான் இன்னொருவன்.

முடியாத பொறிகள் சாத்தியமாயின.

ஆதாம்கள் எப்போதுமே

பதட்டமாக இருந்தனர்.

ஒவ்வொரு நொடியும்

இருப்பைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர் - 

புணர்தலும் புணர்தல் நிமித்தமுமாக.

Saturday, January 20, 2024

கருப்பொளி

போகப் போக எல்லாம்

பழகிக் கொண்டிருந்தது.

வெளிச்சம் வர இன்னும்

சில தசாப்தங்களாகலாமென

அரசாங்கங்கள் அறிவித்திருந்தன.

உலகே கருமை பூண்டிருந்தது.

கூரான வடிவங்கள் தடை செய்யப்பட்டன.

வளைவு முனைகளே ஆகமமாகியிருந்தது.

பிறவிக் குருடர்கள் 

பெருந்தலைவர்களாகி 

வழிகாட்டிக் கொண்டிருந்தனர்.

சர்க்கரை வியாதிக்காரர்கள்

பாத்ரூமுக்கு பக்கத்தில் படுத்துக்கொள்ள

கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

கூகைகள் தேசியப்பறவைகளாக

அங்கீகரிக்கப் பட்டிருந்தன.

எல்லாம் பழகி விட்டிருந்தது.

பின்னொரு நாளில் 

வெளிச்சம் வந்தபோது

இருள் எளிமையாகி விட்டிருந்தது.

வெளிச்சம் சங்கடமாக இருந்தது.

Friday, December 29, 2023

க்ரே கலர் கரடி பொம்மை

நாங்கள் எப்போதும் விளையாடும்

மரப்படிகளுக்குக் கீழேதான்

தாச்சுவை என்னிடம் அப்புனு கொடுத்தாள்.

அவங்க அப்பாவுக்கு ட்ரான்ஸ்ஃபராம், குடிபெயர்ந்து சென்றார்கள்.

தாச்சு நன்றாகத்தான் இருந்தது  - ஒன்றிரண்டு இடங்களில் நூல் பிரிந்திருந்ததைத் தவிர.

பத்திரமாக வைத்திருந்தாலும் அவ்வப்போது பிரிந்த நூல் வழியாக

பஞ்சுகள் வெளிவந்துகொண்டிருந்தன.

ஆனாலும் புதுப்பஞ்சடைத்து அப்படியே வாங்கியமாதிரியே பதப்படுத்தியிருந்தேன்.

பிறிதொரு நாளில் அப்புனுவை அவள் கல்யாணத்துக்கு முன் சந்தித்து கொடுத்தபோது

தாச்சுவா, ஞாபகம் இல்லையே என்று சொல்லி வாங்கிக் கொண்டாள்.

தாச்சுவுக்கு ஏமாற்றமாகத் தெரியவில்லை என நினைக்கிறேன்

எப்போதும் போலவே சிரித்துக்கொண்டிருந்தது.