Saturday, June 28, 2008

நாளை முதல் நட்பு

பக்கத்து இருக்கையில்
எப்போதும் உட்காருதல்,
தோளோடு சாய்ந்து
காதோடு கிசுகிசுத்தல்,
என் சட்டைப்பை பேனாவை
என்னை கேட்காது எடுத்தல்,
நான் வரும் முன்னே வரும்
பேருந்துகளை தவிர்த்தல்

ஆக பல இன்னபிறவற்றையும்
எங்களூரில் காதல் என்பர்!

எனக்கும் அதுவும்
அது அல்லாத சிலதும்தான்
பழக்கமானது!

நீ நினைக்கின்றபடி
நட்பு வேண்டுமெனில்
குறைந்த பட்சம்
நாளைமுதல் நீ
முழுக்காற் சட்டையும்
கழுத்து மட்டும் தெரியும்
முழுக்கைச் சட்டையும்
அணியப் பழகு.

வடக்கு நோக்க...

முப்பதுகளின் இறுதியில் வயது -
கோப்பெருஞ்சோழனை பேருந்துக்கு
காத்திருக்கும் நிமிடங்களில் பரிச்சயம்.

அதிகம் பேசியது இல்லை - ஹலோவில்
ஆரம்பித்து குட் மார்னிங்கிலேயே
முடிந்து விடும் சம்பாஷணைகள்.

மூன்று வாரங்களாக ஆளையேக் காணவில்லை -
விடுமுறையை ஸ்பெயினில்
கழித்துக் கொண்டிருக்கலாம்.
விவாகரத்து ஆனதால்
சோகமாகக்குடித்து கொண்டிருக்கலாம்.
ஒப்பந்தம் முடிந்து வேறிடம் கூடபோயிருக்கலாம்.

எதுவோ காரணம் - ஆனால்
மூன்று வாரங்களாக ஆளைக் காணவில்லை.

அலுவலகம் செல்லும் முன்பு
செலவு செய்து கொண்டிருந்த
ஒரே ஹலோ குட் மார்னிங்-ஐயும்
சேமித்துக் கொண்டிருக்கிறேன்.

வடக்கு எதுவென்று தெரியாததாலும்,
பசி தாங்க முடியாததாலும்
கோப்பெருஞ்சோழன்
மகிழ்ச்சியோ துக்கமோ மீண்டு வர வேண்டிக்கொண்டு
பிசிராந்தையாக நான்!

அழகு

எனக்கு முன்பே
இரு இருக்கைகள் தள்ளி
ஒரு இளம்பெண்.

இலேசாக வாரிய சிகையலங்காரம்
எளிமையான காதணிகள்
சராசரியான மேலாடை.

முகத்தைப் பார்க்கவில்லை என்றாலும் கூட
அழகாகத்தான் இருக்க வேண்டும்.

ஒரே ஒரு கவலை -
எனது நிறுத்தத்துக்கு முன்பே
இறங்கி விட கூடாது.

இருக்கை

முதலில் ஒரே ஒரு
இளம்பெண்.
கண்டிப்பாக உட்கார மாட்டாள்.
ஆமாம், இல்லை.
அடுத்த நிறுத்தத்தில்
பார்ப்போம்.

சில பள்ளி செல்லும்
அல்லது செல்லாத
பதின்பருவ பொறுக்கிகள்.
கட்டாயம் கடைசி இருக்கைதான்.
ஆமாம்.
அடுத்த நிறுத்தத்தில்
பார்ப்போம்.

ஆ, சில இளம்பெண்களுடன்
சில முதியவர்கள்.
சில முதியவர்கள் உட்கார
வாய்ப்பிருக்கிறது.
ஆனால், இல்லை.
அடுத்த நிறுத்தத்தில்
பார்ப்போம்.

சில அலுவலர்கள்.
பார்ப்பது ஆபீஸ் பாய்
வேலை என்றாலும்
கோட்டுக்கு ஒன்றும்
குறைச்சலில்லை.
இவர்களிலும் எவரும்
உட்காரவில்லை.
அடுத்த நிறுத்தத்திலாவது
பார்ப்போம்.

ம்ஹூம்... வாய்ப்பே இல்லை.

இப்படியாக அலுவலகத்தை
அடைந்தேன்.
எனது பக்கத்து இருக்கை
மட்டும் காலியாகவே.

Sunday, June 22, 2008

அழகி

உன்னிடம் எந்த மடையனாவது
நீ அழகாக இல்லை என்று
சொல்லி இருக்கிறானா?

யாராவது உன்னைக்
கவனிக்காமல்
நடந்து இருக்கிறார்களா?

உனக்காக வழி விடாத
காட்டு மிராண்டிகள்
எவரேனும் உண்டா?

இவற்றில் ஏதேனும்
சமீபத்தில் நடந்திருந்தால்
அதற்காக வருத்தப்பட்டு கொண்டு
திங்கட் கிழமை
பஸ் பாஸை ரிநீயு செய்ய
மறந்து விடாதே.