Wednesday, July 07, 2010

இகல் வெல்லுங் கூகை

முதல் மற்றும் கடைசி அறைகள்
உன்னுடையதாக இருக்கட்டும்!
திருப்பித் தாக்க இடங் கொடாதே!
விலாவில் குத்து - வாய்ப்பிருந்தால் முதுகிலும்!
தவறிழைத்து மாட்டிக் கொண்டவன்
திராணி இல்லாதவன் -
மனந் திருந்த விட்டு விடாதே!
வெகுண்டெழு, அச்சம் தவிர், நையப் புடை,
ரௌத்திரம் மட்டும் பழகு!
மனச் சாட்சிகளின் ஒப்புதலோடு
விழித்து விட்ட உன் வன்மங்களுக்கு
இப்படி ஒரு இரை கிடைக்க
இன்னும் சில நாட்கள் ஆகலாம்.

Sunday, July 04, 2010

தாழிகள் செய்பவன்

காசி ஒரு வழியாகச் செத்து விட்டான்.
பொதங் கெழமையாடே என
வட்டிக்குப் பணங் கொடுக்கையில்
வாத்தியார் அலுத்துக் கொண்டார்.
கொழுந்தியா மவச் சடங்கில் இருப்பதாகவும்
மறுநாள் வந்துவிடுவதாகவும் வீயேவோ சொன்னார்.
இன்னும் சில பேர் வெளியில் ஒன்றும் சொல்லவில்லை.
தப்படிக்கிறவனையும் உருமி அடிக்கிறவனையும் தவிர
ஊரே காசி மவனைக் கரித்துக் கொண்டிருந்தது.
அதுவரை எங்களூரில்
தொண்டுக் கெழங்கள் எல்லாம்
ஏதோ ஒரு விடுமுறை நாளில்தான்
நல்லெண்ணெய் சொட்டச் சொட்ட
இறந்து கொண்டிருந்தார்கள்.

Saturday, July 03, 2010

The Gift of the Magi

நேக வருடங்களுக்குப் பின் முதல் முறையாக இந்தக் கிறிஸ்துமஸில் பங்கேற்பதாலோ அல்லது கேரலின் இன்னும் வராததாலோ தெரியவில்லை, கரோலில் மனம் செல்லவில்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் கரோல் முடிந்து விடும். அதற்குப் பின் இருவரும் கேரலின் வீட்டில் கிறிஸ்துமஸ் லஞ்ச்சுக்கு செல்வதாகத்தான் ஏற்பாடு. கேரலின் என்னை நானாக இன்னும் பார்த்ததில்லை. இந்தத் தருணத்துக்காக எத்தனை முறை ஒத்திகை பார்த்திருப்பேன். எழப்போகும் ஆச்சர்யங்களின் எல்லா சாத்தியங்களுக்கும் என்னைத் தயாரித்திருந்தேன் - கேரலின் வராமலிருப்பதைத் தவிர. அவள் எனக்காக வைத்திருப்பதாகச் சொன்ன கிறிஸ்துமஸ் பரிசு வேறு ஞாபகத்தில் வந்து போனது.

கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பு, சரியான நாள் ஞாபகம் இல்லை, அலுவலகத்தில் நான் வேலை பெரிதாக ஒன்றும் இல்லாததால் ஆண்டியுடன் ஸ்னூக்கர் ஆடிக்கொண்டிருந்தபோது காலின் வந்தான். காலின் நான் 10 வயதில் இந்த ஊருக்கு வந்தது முதல் என் சிநேகிதன் - இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது யாருக்கும் தெரியாது. MI5-யில் இருப்பதாக ஹார்ஸ் ஷூ இன்னில் சொல்லக் கேள்வி. கேட்டாலும் பதில் தெரிவது உங்களுக்கு நல்லதிற்கு இல்லை எனச் சொல்லிவிட்டானாம். வழக்கமான சம்பிரதாய உபசரிப்புகளுக்குப் பின் நேராகவே விஷயத்துக்கு வந்து விட்டான்.

"வில்லீ, இன்னும் ஒரு ரெண்டு வருஷத்துக்கு நான் ஆர்மடேல் வர முடியாது. கேரலினை உனக்குத் தெரியும். நான் அவளுக்கு எந்தக் கடனும் படவில்லை என்றாலும் என்னோட குற்ற மனப்பான்மையச் சமாதானப் படுத்த நீ உதவனும். அவள் தனியாகச் செத்துக்கொண்டிருக்கின்றாள் ."

கேரலின் காலினின் தந்தையின் இரண்டாவது மனைவி. காலின் ஒரு மிஷனுக்காக ஐவரி கோஸ்ட் செல்கிறானாம். அவன் திரும்பி வரச் சந்தர்ப்பம் வாய்க்கும்போது கேரலின் உயிருடன் இருக்கும் சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு. அதனால் எனக்கு இரண்டு வேண்டுகோள்கள் வைத்தான். முதலாவது கேரலின் உயிர் நீக்கும்போது அவளுக்காக யாரும் இல்லாததால் இறுதிக் கடன்களை நான் கவனித்துக் கொள்ள வேண்டும். இது எனக்கு ஒரு பிரச்சினையே இல்லை. ஏனெனில், என் தொழிலே அதுதான் - ப்யுனரல் டைரக்டர். மனிதர்களின் இறுதிப் பயணங்களைத் திட்டமிட உதவுபவன். ஆனால், காலினின் இரண்டாவது கோரிக்கை எனக்குக் கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தது.
"இந்த மொபைல் போன் காண்ட்ராக்ட் ரெண்டு வருஷத்துக்கு இருக்கு. என்னோட அக்கௌண்டில் டைரக்ட் டெபிட் செய்து விட்டேன். உனக்கே தெரியும் - கேரலின் எனக்கு செய்த கொடுமைகளை. ஆனா, என்னால அவளைத் தண்டிக்க முடியலை. யாருமே நண்பர்கள் இல்லாம, பக்கத்து வீட்டு வில்பரத் தவிர, அவரைத் தெரியுமில்ல, அவ பேச்சுத் துணைக்கு கூட ஆளில்லாம, சாவுக்காக வெயிட் பண்றது எனக்கு கஷ்டமா இருக்கு. எனக்காக நீ பண்ணக் கூடிய ஒரு பெரிய உதவி கேரலினோட சிநேகம் வளத்துகிட்டு முடிஞ்சப்பலாம் இந்த போன்ல அவளோட பேசிக்கிட்டிரு - ஒரு நண்பனாவோ, ஒரு ஸ்ட்ரேஞ்சராகவோ அல்லது எதுவோ ஒண்ணா... அவ கிட்ட கடைசியாப் பேசினப்ப புரிஞ்சுகிட்டது அவ ஏங்குறது பேச்சுத்துனைக்குத்தான். என்னால இப்ப அது முடியாது. உன்னால முடிஞ்ச வரைக்கும் ட்ரை பண்ணுறியா? ஜஸ்ட் பீ அன் அனானிமஸ் டெலிபோன் ப்ரண்ட். முடியலன்னா பரவாயில்லை."

எனக்கும் காலினுக்கும் அம்மா விஷயத்தில் ஏகப் பட்ட ஒற்றுமைகள் உண்டு - இருவருமே இளவயதில் எங்களது அம்மக்களை இழந்தவர்கள். எனது அம்மா ஒரு ட்ரக் அடிக்ட். என்னைப் பெத்ததும் யாருடனோ பயந்து ஓடிவிட்டாள். காலின் அம்மா அவன் பிறந்த சில நாட்களிலேயே காச நோயால் இறந்து விட்டாள். இருவருமே அப்பாக்களின் இரண்டாவது மனைவியரின் வெறுப்புடனே வளர்ந்தோம். கேரலின் காலின் வெறுப்புகளும் சண்டைகளும் எங்கள் ஏரியாவில் பிரசித்தம். அவளுக்கு முதல் திருமணத்தின் வழியே ஒரு மகன் இருப்பதாகக் கூடப் பேச்சு. ஆனால், இத்தனை வருடங்களுக்குப் பிறகு அவர்களையும் புரிந்து கொள்ள முடிகிறது - எனது மண வாழ்க்கைகளின் தோல்விகளுக்குப் பிறகு.

காலினுக்காகவும், கேரலினின் கடைசிக் காலங்களுக்காகவும், எனதுத் தோல்விகளே மிஞ்சிய தனிமர வாழ்க்கையிலிருந்து விடுதலை பெறுவதற்காகவும் அவனது இரண்டாவது வேண்டுகோளுக்கும் ஒத்துக் கொண்டேன். நாற்பத்தைந்து வயதுகளுக்குப் பின் புதிய உறவுகளை ஏற்படுத்த முயல்வது எனக்கு ஆயாசமாக இருந்தது. ஆரம்பத்தில் ஏன் ஒத்துக் கொண்டோம் என எரிச்சலாகவும் இருந்தது. இரண்டு வாரங்கள் தயக்கத்திலேயே பேசாமல் இருந்தேன். பிறகு ஒரு நாள் பேச ஆரம்பித்தேன். பெண்களைப் பேச வைப்பது ஒன்றும் என்னுடைய ரெபுடேஷனுக்கு சவாலான வேலை இல்லை.

"ஹாய் யா, கேரலின் ஹன்ட்டர் ஸ்பீக்கிங்."
"சாரி, நான் ராங் நம்பர்."
"ஒக்கே... வாட்ஸ் யுவர் மிடில் நேம்?."
"ஹா... ஹா... ஹா... உங்க குரல் ரொம்ப நல்லா இருக்கு." கேரலின் லோக்கல் பிபிசியில் வேலை பார்த்தவள்.
"மிஸ்டர் ராங் நோ-மிடில்-நேம் நம்பர்... நீங்க இந்த மாதிரி ஒரு இனிமையான பொய்யை என்னிடம் ஒரு அரை நூற்றாண்டுக்கு முன்பு சொல்லி இருக்கனும்."
" ஐ'ம் வில்லியம் சிட்னி போர்ட்டர்..."
"ஹா ஹா ஹா... ஐ தின்க் வில்லியம் ப்ளர்டிங் போர்ட்டர்... ஹா ஹா ஹா..."

கேரலின் எனக்காகவேக் காத்திருந்த மாதிரி பேச ஆரம்பித்தாள். வாரம் ஒரு முறை என்பது வாரம் இருமுறையாகி, பிறகு தினமும் பேசாவிட்டால் தலை வெடித்துவிடும் நிலைக்கு ஆளானேன். கேரலினுடன் பேசப் பேசத்தான் எனக்கு ஒரு பேச்சுத் துணை அவளைக் காட்டிலும் எத்தனைத் தேவை என்பதை உணர்ந்தேன். முதல் முறையாக ஒரு பெண்ணிடம் படுக்கை அறையைப் பற்றி யோசிக்காமல் பேசிக்கொண்டிருந்தேன். இது நட்பல்ல, காதலுமல்ல. எனக்கு இந்த அன்பு ரொம்பப் புதியது. அன்பு ஒருவரது அத்தியாவசியத் தேவையாகும் புள்ளிகளில் நானும் கேரலினும் சந்தித்துக் கொண்டோம். இப்படியெல்லாம் நான் சாத்தியமா என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நான் இவ்வளவு மென்மையானவனாய் நாகரிகமானவனாய் என்னை இதுநாள் வரை என்னை உணர்ந்ததே இல்லை. கேரலின் மீது எனக்கிருந்த அபிப்ராயங்கள், பெரும்பாலானவை தவறு, மாறத்தொடங்கின. ஆனால், ஊர் அவளை இன்னும் ஒரு கொடுங்கோலியாகத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறது.

இவ்வாறாக என் தனிமை என்னைவிட்டு மெல்ல விலக ஆரம்பித்தபோதுதான் அதிர்ச்சி என்னை நெருங்கி வந்தது. சென்ற புதன் கிழமை காலினின் நண்பன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவன் என்னை அலுவலகத்தில் சந்தித்தான். காலின் ஐவரி கோஸ்டில் இறந்து விட்டான் என்றும், இங்கிருக்கும் அவனது உடமைகளை டிஸ்போஸ் செய்யும் பொறுப்பு தன்னிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பதாகவும் சொன்னான்.

"காலின் தனது உடமையாக வைத்திருந்தது இந்தப் பெட்டி மட்டுமே. மத்த நிதி விவகாரங்களை அவனே ஐவரி கோஸ்ட் செல்லும் முன்பு ஏற்பாடு செய்திருப்பான். தனது நெக்ஸ்ட் ஆப் கின் முகவரியாக உங்களுடையதைத் தந்திருப்பதால் உங்களிடம் இதை ஒப்படைக்கிறோம்." என்றும் மேலதிகத் தகவல் தெரிய முயற்சிப்பது எதுவும் எனக்குத் தீங்காகவே முடியும் என்றும் கூறிவிட்டுச் சென்றுவிட்டான். காலினின் பெட்டிக்குள் வெறும் பொம்மைகளும் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளும். எல்லா அட்டைகளுமே "டியர் மாம்..." என்று ஆரம்பித்தன. ஒவ்வொரு வருடமும் அவன் தனது இறந்து போன அம்மா நினைவில் வாங்கி வைத்திருந்த கிறிஸ்துமஸ் பரிசுகள் - கடந்த 25 வருடங்களுக்கான சேமிப்பு. ஒரு டி பியர்ஸ் வைரம் கூட இருந்தது - மலிவானது என நினைக்கிறேன். கேரலின் பரிசுகள் கிறிஸ்துமஸ்சுக்காக நிறைய வாங்கினாலும் காலினுக்கு எப்போதும் பரிசுகள் தந்ததில்லை; அவனது அப்பா மட்டுமே. நிறையமுறை எங்களிடம் சொல்லிக் குறைபட்டுக் கொண்டிருக்கிறான்.

இதை கேரலினிடம் சொல்வதா வேண்டாமா என்று நான் கடைசி வரை முடிவே செய்யமுடியவில்லை. வாராந்திரம் ஹார்ஸ் ஷூ இன்னில் சந்திக்கும் நண்பர்களிடம் மட்டும் ஸ்காட்ச்சுடன் பகிர்ந்து கொண்டேன். இதற்குப் பிறகு இரண்டு நாட்கள் கேரலினிடம் பேசவே இல்லை. ஏனென்று தெரியவில்லை மிஸ்ட் கால்களுக்கும் வாய்ஸ் மெயில்களுக்கும் பதில் சொல்ல மனசே இல்லை - அந்த வாய்ஸ் மெயில் கேட்கும் வரை.

"வில்லீ... நாம் இருவரும் டெலிபோனில் பேசிக்கொண்டிருப்பது இதுவே கடைசி. கிறிஸ்துமஸ் அன்று உன்னை கிறிஸ்துமஸ் கரோலில் எதிர்பார்க்கிறேன். இரண்டு பேரும் பின்பு என் வீட்டுக்கு லஞ்சுக்கு போகலாம். உனக்காக எனது ஆகச் சிறந்த கிறிஸ்துமஸ் பரிசுகளுடன் வெயிட் பண்ணிக்கொண்டிருக்கின்றேன்.".

அப்போதுதான் காலினின் மறைவைச் சொல்லி கேரலினை வருத்தப் பட வைக்க வேண்டாம் என முடிவெடுத்தேன். கேரலினுக்கான எனது பக்கமும் பரிசு ரெடி - காலின் அவன் அம்மாவுக்காக சேமித்திருந்த பெட்டி. இறந்த பிறகாவது காலின், கேரலின் மேல் அன்பு வைத்திருந்ததை எப்படியாவது உணர்த்த ஒரு சந்தர்ப்பம். காலின் அவளுக்காக வாங்கி, கொடுக்க மறந்த பரிசுகள் எனக் கொடுத்து இன்னா செய்தாரை ஒறுக்க நினைத்தேன். கிறிஸ்துமஸ் காலை வண்ணப் பேப்பர் சுற்றிய பெட்டியையும், வாங்கி வைத்திருந்த போளிங்கர் குவீயையும் காரின் பின்புறம் போட்டுகொண்டு கரோலுக்கு கிளம்பினேன்.

ன்னும் கேரலின் வரவில்லை. உங்களுடன் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் கரோலும் முடிந்துவிட்டது. நேரே கேரலின் வீட்டுக்குச் செல்ல வேண்டியதுதான். வீட்டுக்கு முன்பு காரை நிறுத்திவிட்டு ஷாம்பேன் பாட்டிலை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன். வில்பர் வெளியே வந்து கொண்டிருந்தார்.

"ஹாய் யங் மேன், அதுக்குள்ளே உனக்கு யார் தகவல் சொன்னா? காலினோட ப்ரெசென்ஸ் இல்லாத பட்சத்துல ப்யுனரலுக்கு நான் பொறுப்பு எடுத்துக்கிறேன். ரெஜிஸ்ட்ரார் ஆபீஸ்தான் போயிக்கிட்டு இருக்கேன். சர்ட்டிபிகேட் வாங்கி வந்ததும் நீ ஆரம்பிச்சுடலாம். காலின் என்னிடமும் ஏற்பாடுகளை சொல்லிட்டுப் போனான். ஆனா இவ மட்டும் கடைசி வரைக்கும் அவன் மேல கசப்பையேக் கொட்டிகிட்டு இருந்தா".
எனக்குள் ஒரு நூல் அறுந்தது. உள்ளே இன்னும் கொஞ்சம் பேர் விசிடேஷனுக்காக கேரலினைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள்.
"அப்புறம் உன்கிட்ட ஒரு பார்சல் கொடுக்கச் சொன்னா நேத்து நைட். எஸ், ஷி ஆல்வேஸ் நோஸ் இட்.."
கேரலின் தன் மகனுக்காக வாங்கிச் சேமித்து வைத்திருந்த கிறிஸ்துமஸ் பரிசுகள் அவை - 50௦ வருடங்களாக. ஏன் எனக்கு? எப்பவாவது உங்களுக்கு உங்கள் இயலாமையின் மீது காறித் துப்பத் தோன்றி இருக்கிறதா?
ஆனால் அந்தப் பார்சலை என்ன செய்வது என்று முடிவெடுக்க எனக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.
"வில்பர், அது கேரலின் காலினுக்காக வாங்கி வைத்திருந்து கொடுக்காமல் போன கிறிஸ்துமஸ் பரிசுகள்." என்னையுமறியாமல் கத்தினேன். உள்ளே இருந்த அனைவரும் என்னை வினோதமாகத் திரும்பிப் பார்த்தார்கள்.
"உங்கள் எல்லோருக்கும் இன்னும் ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கு." காரை நோக்கிப் போனேன்.