Saturday, September 13, 2008

மொழி பெயர்ப்பு

எனக்குப் புரிகிறது -
அந்தக் கருவிழிகளின் அசைவிலும்,
புருவங்களின் நெரிப்பிலும்,
இதழ்களின் விரிப்பிலும்
உள்ள தயக்கங்களின் மொழிகள்!

இனி நான் உனக்கான
கனாக்களை காண்பதில்லை.
என் பேனாவை எறிந்துவிட்டேன் -
உனக்கான கவிதைகளை வேறு யாரோ
எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்னொரு முறை
சந்திக்க நேரிடும் போதும் பேசிவிடாதே -
காதல் என்பது காதலிப்பதில்
மட்டும் இல்லை!
இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் -
இதுவும் பரவசமாய்த் தான் இருக்கிறது!

Thursday, September 11, 2008

நத்தைக் கூடுகள்

நள்ளிரவு நேரமாதலால் கவனிக்கவில்லை -
நசுங்கிய சத்தம் மட்டுமே கேட்டுக் குனிந்தேன்.
முதலில் பதட்டம்,
பின்னர் கவனித்து நோக்கியதில் தெளிந்தேன்.
கடைசியில் கோபம் - ஏன் வந்து என் காலில்
மிதி பட்டாய் என்று?

இப்படி சில நத்தைக் கூடுகள அவ்வப்போது.
ரோட்டோரங்களில், பள்ளிக்கூடங்களில்,
திருவிழாக்கூட்டங்களில் மற்றும் பல இடங்களில்.
நானும் உங்களைப் போலவே
நசுங்கிய நத்தைகளையும் குற்ற உணர்வையும்
தள்ளிவிட்டுத் தொடர்ந்து பயணிக்கிறேன்.
நத்தைகளையும் மிதித்தவர்களையும் திட்டியபடியே -
கொஞ்சம் கூட உறுத்தலிலில்லாமற்!