Sunday, April 22, 2012

குற்றமும் தண்டனையும்

உங்களில் உத்தமர் எவரோ
அவர் முதலில் பந்தத்தை எறியட்டும்
எனக் கத்தினேன்.
முதலில் ஏழு பந்தங்கள் விழுந்தன.
பின்னர் என் வீட்டை எரிக்கத் தேவையானவைகள்.
கூட்டம் கத்திக்கொண்டே
அடுத்த இலக்கை நோக்கி ஓட ஆரம்பித்தது.
நானும் இணைந்து கொண்டேன்.
கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல்
உங்களை குருடர்களாகவும்
பொக்கைகளாகவுமாக்கும் மூடர்களே
எனக் கத்திக்கொண்டிருந்தான் வீட்டுக்காரன்.
நீ ஹமுராபியிடம்
பேசிக்கொண்டிருக்கிறாய் மூட
என முதற் பந்தம் எறிந்தது நான்.
மேலும் பல தீர்ப்புகள்
மேலும் பல தண்டனைகள்
மேலும் மேலும் ஓடிக்கொண்டிருந்தோம்.
பந்தங்களின் ஒளியால் ஊரே பகலாயிருந்தது.
ஒரு கட்டத்தில் கால்கள் பின்னின.
தண்டிக்கப்பட வேண்டியவர்கள்
எண்ணிக்கை குறையப் போவதில்லை.
அலுத்துத் தளர்ந்தேன் - பக்கந்திரும்பி
வெளிச்சங்கள் தொலைந்த
தூர மலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
இன்றிரவாவது தூங்க வேண்டும்.

Saturday, December 17, 2011

The Road Not Taken

அம்மாவிடம்
சத்தியங்களைப் பண்ணி விட்டாயா
என்று கேட்டேன்.
தேவையா என
யோசித்துக்கொண்டிருக்கின்றேன் என்றான்
பொடிமாஸில் இருந்த மிளகாயை
எடுத்துப் போட்டுக் கொண்டே.
சிறிது நேரம் கழித்து
வழக்கத்தை விட சீக்கிரமாகவே
எழுந்து போய் விட்டான் -
பயணத்துக்கான ஏற்பாடுகள்
இன்னும் பாக்கி இருப்பதாக.
மோகன் அம்மாவிடம்
சத்தியம் பண்ணிக்
கொடுத்தானா இல்லையா
என்று தெரியாது.
ஆனால் அவன் திரும்பி வரும்போது
வாங்கி வந்த ஸ்காட்ச்சுகள்
புகைவண்டிச் சம்பவத்துக்கு
பழிதீர்த்த நாளின்
பின்னிரவில் பயன்பட்டன.

Wednesday, December 14, 2011

போதி நிழற் புற்கள்

விபரம் தெரிந்த நாட்களிலிருந்தே
என்னோடு தொடர்ந்து வளர்கின்றன
அந்த மூன்று நாய்கள்.
கொழுத்துச் செழித்து
இருப்பதாக எனக்குத் தெரிந்தாலும்
கோரைப் பற்களை நான் கவனித்ததில்லை -
நண்பர்கள் கூறுவதுண்டு.
எங்களூரில் வெகு சிலரிடமே உள்ள
இவற்றுக்கென இரைகள்
அந்தச் சிலர் மட்டுமே அறிந்த
இடங்களில் கிடைக்கின்றன.
அவற்றின் வெறியின் உச்சத்திற்கு
பலியான நண்பர்களும் உண்டு.
நானும் மற்றும்
அந்த இன்னுஞ்சிலரும்
அவை அளித்த
பாதுகாப்பை மட்டுமே உணர்ந்திருந்தோம்.
சித்தார்த்த கௌதமன் இன்னும் மோசம் -
யசோதாவும் ராகுலனும்
அவனது நாய்களால்
இறந்து பட்டது கூடத் தெரியாது.

Wednesday, July 07, 2010

இகல் வெல்லுங் கூகை

முதல் மற்றும் கடைசி அறைகள்
உன்னுடையதாக இருக்கட்டும்!
திருப்பித் தாக்க இடங் கொடாதே!
விலாவில் குத்து - வாய்ப்பிருந்தால் முதுகிலும்!
தவறிழைத்து மாட்டிக் கொண்டவன்
திராணி இல்லாதவன் -
மனந் திருந்த விட்டு விடாதே!
வெகுண்டெழு, அச்சம் தவிர், நையப் புடை,
ரௌத்திரம் மட்டும் பழகு!
மனச் சாட்சிகளின் ஒப்புதலோடு
விழித்து விட்ட உன் வன்மங்களுக்கு
இப்படி ஒரு இரை கிடைக்க
இன்னும் சில நாட்கள் ஆகலாம்.

Sunday, July 04, 2010

தாழிகள் செய்பவன்

காசி ஒரு வழியாகச் செத்து விட்டான்.
பொதங் கெழமையாடே என
வட்டிக்குப் பணங் கொடுக்கையில்
வாத்தியார் அலுத்துக் கொண்டார்.
கொழுந்தியா மவச் சடங்கில் இருப்பதாகவும்
மறுநாள் வந்துவிடுவதாகவும் வீயேவோ சொன்னார்.
இன்னும் சில பேர் வெளியில் ஒன்றும் சொல்லவில்லை.
தப்படிக்கிறவனையும் உருமி அடிக்கிறவனையும் தவிர
ஊரே காசி மவனைக் கரித்துக் கொண்டிருந்தது.
அதுவரை எங்களூரில்
தொண்டுக் கெழங்கள் எல்லாம்
ஏதோ ஒரு விடுமுறை நாளில்தான்
நல்லெண்ணெய் சொட்டச் சொட்ட
இறந்து கொண்டிருந்தார்கள்.